Posted in

இந்தியப் பெருங்கடலில் புதிய பதற்றம்: சாகோஸ் தீவின் மீது உலக வல்லரசுகளின் கவனம்

இந்தியப் பெருங்கடலில் பிரிட்டனிலிருந்து சுமார் 6,000 மைல் தொலைவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சாகோஸ் தீவுக்கூட்டங்கள் (Chagos Islands), உலக வல்லரசுகளின் சர்வதேசப் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியலின் மையப்புள்ளியாக மீண்டும் உருவெடுத்துள்ளன.

பிரிட்டனின் இறையாண்மையின் கீழ் உள்ள இத்தீவுக் கூட்டத்தில் அமைந்திருக்கும் ‘டைகோ கார்சியா’ (Diego Garcia) என்ற மிகப்பெரிய தீவில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகளின் அதிநவீன கூட்டு ராணுவத்தளம் இயங்கி வருகிறது. மத்திய கிழக்கு, தெற்காசிய மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியங்களில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், கண்காணிப்புகளை விரிவுபடுத்துவதற்கும் இந்தத் தளம் மேற்கத்திய நாடுகளுக்கு மிகவும் இன்றியமையாத பாதுகாப்புப் அரணாகத் திகழ்கிறது.

சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸ் நாட்டிற்கு வழங்கி, டைகோ கார்சியா ராணுவத் தளத்தை மட்டும் 99 ஆண்டுகளுக்குப் குத்தகைக்கு எடுக்கும் ஒப்பந்தத்தை பிரிட்டன் மேற்கொண்டிருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து, இந்த ஒப்பந்தத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்யப் போவதாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை தற்போது அறிவித்துள்ளது.

சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் வேளையில், சாகோஸ் தீவுகளை மொரீஷியஸிடம் ஒப்படைப்பது சர்வதேசப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவின் ஆதரவின்றி இந்த ஒப்பந்தம் நிறைவேறாது என்பதால், சாகோஸ் தீவுகளின் எதிர்காலம் மற்றும் மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்புத் திட்டங்கள் மீண்டும் பெரும் அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.