சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) பயன்பாட்டிற்காக இந்த புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் நடப்பு நிதியாண்டில் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதற்காக ரூ.500 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது பேருந்து பணிமனைகளில் தேவையான மின்சாரச் சார்ஜிங் மையங்கள் மற்றும் பராமரிப்பு இயந்திரவியல் வசதிகளை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படும்.
தற்போது சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 755 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றில் 355 பேருந்துகள் மட்டுமே குளிர்சாதன வசதி கொண்டவையாக உள்ளன. இந்நிலையில் புதியதாக 1,000 ஏசி மின்சாரப் பேருந்துகள் சேர்க்கப்படுவதன் மூலம் நகர்ப்புறப் போக்குவரத்து சேவை கணிசமாக விரிவடையும். இதன் மூலம் சுற்றுப்புறச் சூழல் மாசுபாடு குறைக்கப்பட்டு, பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவம் கிடைக்கும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்துகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வாகனக் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் அவசரக் கட்டுப்பாட்டு பொத்தான்களைப் பொருத்த தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்படுவதன் மூலம் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்கள் பயன்பாடு அதிகரிக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.