அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கும் போரைக் கையாழும் விதத்திற்கும் அமெரிக்க மக்களிடையே ஆதரவு பெருமளவில் சரிந்துள்ளதாகவும், வெறும் 4-ல் 1 பங்கு (25%) அமெரிக்கர்கள் மட்டுமே டிரம்பின் ஈரான் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் புதிய தேசிய அளவிலான கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.
வாஷிங்டனில் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஆய்வமைப்புகள் இணைந்து நடத்திய இந்த விரிவான கருத்துக்கணிப்பில், ஈரான் உடனான ராணுவ மோதல், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அதனால் அமெரிக்காவில் எகிறியுள்ள பணவீக்கம் ஆகியவை அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இப்போரினால் அமெரிக்காவிற்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளும், எரிபொருள் விலை உயர்வும் நியாயமற்றவை எனப் பெரும்பான்மையான வாக்காளர்கள் கருதுகின்றனர்.
கருத்துக்கணிப்பின் முடிவுகளின்படி, 70 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் டிரம்பின் ஈரான் போர்க் கொள்கைக்குத் தங்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, குடியரசுக் கட்சியின் பாரம்பரிய ஆதரவாளர்கள் மற்றும் சுயேச்சை வாக்காளர்கள் மத்தியிலும் டிரம்பின் பிரபலத்தன்மை மற்றும் செயல்பாட்டு ஆதரவு விகிதம் (Approval Rating) 32 சதவீதமாகச் சரிந்து, அவரது அரசியல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் (Midterm Elections) நடைபெறவுள்ள நிலையில், ஈரானுடனான நீண்டகாலப் போர் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கைச் செலவினங்கள் (Cost of Living) அதிகரித்துள்ள விவகாரம் குடியரசுக் கட்சிக்கு மாபெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். போரைக் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்து பொருளாதாரத்தைச் சீரமைக்கத் தவறினால், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைகளில் பெரும்பான்மையை இழக்கும் ஆபத்து டிரம்பிற்கு ஏற்பட்டுள்ளது.