கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானியுடன் வாஷிங்டனில் சந்திப்பு நடத்திய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பு அறையில் பேசினார். அப்போது ஈரான் ராணுவ ரீதியாகப் பலமிழந்துவிட்டதாகவும், அந்த நாட்டுடனான ராணுவ மோதல் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய சூழலில் கூடுதல் ராணுவ நடவடிக்கை தேவைப்படாது என்றும், எனினும் அமெரிக்கப் படைகள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் கத்தார் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் தீவிரத் தூதரக முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைப் பெறக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த டிரம்ப், இதற்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பக்கத்து நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே தற்போது அங்கே அமைதியான சூழல் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளதுடன், மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வந்த ராணுவப் பதற்றம் தணியும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எனினும், ஈரானின் எதிர்கால அணுசக்தித் திட்டங்கள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்வது அவசியமானது எனக் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது கத்தார் மற்றும் பிற நட்பு நாடுகளின் மத்தியஸ்தத்துடன் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாகி வருகிறது.
அமெரிக்கா மற்றும் பிராந்திய நாடுகளின் அடுத்தகட்ட தூதரக நடவடிக்கைகள் மூலம் இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.