Posted in

இங்கிலாந்தின் 4,000 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட கற்கள்: பனிப்பாறைகளால் நகரவில்லை என புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

இங்கிலாந்தில் உள்ள 4,000 ஆண்டுகள் பழமையான சுமார் 28 டன் எடையுள்ள பிரம்மாண்டமான வரலாற்றுச் சிறப்புமிக்க பாறைக் தூண்கள் இயற்கையான பனிப்பாறைகளின் நகர்வால் அடித்து வரப்படவில்லை என்றும், மனிதர்களாலேயே திட்டமிட்டு கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டுள்ளன என்றும் புதிய அறிவியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் வட யார்க்ஷயரில் அமைந்துள்ள ‘டெவில்ஸ் ஆரோஸ்’ (Devil’s Arrows) எனப்படும் இந்த பிரம்மாண்ட பாறைகள், பனி யுகத்தின் போது ஏற்பட்ட இயற்கை மாற்றங்களாலேயே இங்கு வந்து சேர்ந்ததாக இவ்வளவு காலம் கருதப்பட்டு வந்தது. ஆனால், ஆஸ்திரேலியாவின் கர்ட்டின் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் யார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட நவீன ஆய்வில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாறைகளின் தாதுக் துகள்களைப் பரிசோதித்த நிபுணர்கள், இவை அருகிலுள்ள பகுதிகளில் இருந்து எடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர். சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘பிரிம்ஹாம் ராக்ஸ்’ என்னும் மிகவும் கடினமான மலைப் பகுதியில் இருந்தே பழங்கால மனிதர்கள் இந்தப் பிரம்மாண்ட பாறைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து, பல கிலோமீட்டர் தூரம் வரை மனித ஆற்றலைக் கொண்டு சுமந்து வந்துள்ளனர்.

சுமார் கிமு 2000 காலகட்டத்தில், அதாவது வெண்கல யுகத்தின் தொடக்கத்தில் வாழ்ந்த மனிதர்களின் பொறியியல் திறனுக்கும் ஒருங்கிணைப்பிற்கும் சான்றாக இது திகழ்கிறது. இந்த கற்கள் வெறுமனே வழிபாட்டுக்காகவோ அல்லது கட்டிடப் பணிகளுக்காகவோ மட்டும் தேர்வு செய்யப்படாமல், அந்த பழங்கால சமூகத்தின் கலாச்சார மற்றும் நம்பிக்கை அமைப்பின் முக்கிய அடையாளமாகவே இவ்வளவு சிரமப்பட்டு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.