ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான கந்தஹார் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ஒரே வாரத்திற்குள் பாகிஸ்தான் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இது என்பதால், ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தி வரும் ‘தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ (TTP) அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு புகலிடம் அளித்து வருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த சூழலில், கந்தஹாரில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் வாழும் பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், அப்பாவி மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தலிபான் அரசு குற்றம் சுமத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்குப் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தலிபான் ராணுவ அமைச்சகம் எச்சரித்துள்ளதால், எல்லைப் பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையான டுரண்ட் எல்லைக் கோட்டுப் பகுதியில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே தொடர் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது கந்தஹார் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் இரு நாடுகளும் அமைதி காக்குமாறும், பேச்சுவார்த்தை மூலம் தீவிரவாதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறும் வலியுறுத்தியுள்ளன.