பிரிட்டனின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் உள்ள M67 விரைவுச் சாலைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு, கடந்த 7 மாதங்களாகக் காணாமல் போன 41 வயதுடைய அஜானி கேம்ப்பெல் (Ajani Campbell) என்பவருடையதுதான் என்பது டி.என்.ஏ (DNA) பரிசோதனையின் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் M67 நெடுஞ்சாலையின் மேலேயுள்ள இரயில்வே பாலத்தைப் பரிசோதித்த பராமரிப்புப் பணியாளர்கள், பாலத்தின் கான்கிரீட் சரிவுப் பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடப்பதைக் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கு எவ்வித அடையாள அட்டைகளோ அல்லது தனிப்பட்ட பொருட்களோ இல்லாததால், எலும்பில் இருந்து டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரித்துத் தீவிர தடயவியல் ஆய்விற்கு உட்படுத்தினர்.
லங்காஷயரின் ப்ரெஸ்டன் பகுதியைச் சேர்ந்த அஜானி கேம்ப்பெல், கடந்த ஜனவரி மாதம் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு மான்செஸ்டர் நகருக்குச் சென்ற நிலையில் காணாமல் போனதாகக் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டிருந்தது. மான்செஸ்டர் ரயில் நிலையத்தில் அவர் நடந்து செல்லும் இறுதிச் சிசிடிவி (CCTV) காட்சிகள் பதிவாகியிருந்த நிலையில், அதன்பின் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் மூலம் அஜானியின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
7 மாதங்களாக நடைபெற்று வந்த தேடுதல் வேட்டை சோகத்தில் முடிந்த போதிலும், அஜானியின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது இன்னும் புதிராகவே உள்ளது. அவர் அந்தப் பாலத்தின் அடியிற்கு எவ்வாறு வந்தார் மற்றும் அவரது உயிரிழப்பில் சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் மான்செஸ்டர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.