Posted in

தவெக எம்எல்ஏக்களுக்குச் சென்னைக்கு வர தலைமை உத்தரவு: நவம்பர் 11-ல் அவசரக் கூட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வரும் நவம்பர் 11-ஆம் தேதி சென்னைக்கு வர வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமை அலுவலகத்தில் இந்த அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது. தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுவெளியிலும் தங்களது தொகுதிகளிலும் தொடர்ச்சியாகப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகக் கருதப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துறைமுக தொகுதி எம்எல்ஏ ரவிசங்கர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான விவகாரங்கள் பெரும் அரசியல் எதிர்ப்பைக் கிளப்பின. மேலும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 4 எம்எல்ஏக்களுக்குத் தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீஸை சபாநாயகர் அண்மையில் அனுப்பியிருந்தார். இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் குறித்துக் கட்சித் தலைமை மற்றும் அரசு மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் தீவிர விமர்சனங்கள் ஆலோசிக்கப்படவுள்ளன.

இக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பொதுவெளியிலும் தொகுதிகளிலும் எவ்வாறு கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்துக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளார். மக்கள் மத்தியில் கட்சியின் நன்மதிப்பைக் காக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய சம்பவங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கட்சித் தலைமை எச்சரிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், தகுதி நீக்க நோட்டீஸ் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டப்பூர்வ மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்தும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

வரும் நவம்பர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.