அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், டீசல் ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிக்கும் திட்டத்தை அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சர் கிறிஸ் ரைட் (Chris Wright) திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். ஏற்றுமதித் தடைக்கு மாறாக, எரிபொருள் நிறுவனங்கள் தானாக முன்வந்து ஏற்றுமதியைக் குறைத்துக் கொள்ளும் முறையே சிறந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் உக்ரைன் போர்கள் காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடால் அமெரிக்காவில் டீசல் விலை ஒரு கேலன் $6.52 (சுமார் 76% உயர்வு) என்ற உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டீசல் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வந்த நிலையில், எரிசக்தித் துறை அமைச்சரின் இந்த மாற்று கருத்து அமெரிக்க அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் கிறிஸ் ரைட், “டீசல் ஏற்றுமதியை முழுமையாகத் தடை செய்வது எந்த பலனையும் தராது” எனக் கூறினார். சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் டீசலை ஏற்றுமதி செய்ய முடியாவிட்டால், சில வாரங்களிலேயே சேமிப்புக் கிடங்குகள் நிரம்பிவிடும். இதன் காரணமாக எரிபொருள் சுத்திகரிப்பு ஆலைகள் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும், அது பெட்ரோல் மற்றும் விமான எரிபொருட்களின் விலையை மேலும் உயர்த்தவே வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
எனவே, கடுமையான அரசுத் தடைகளை விதிப்பதற்குப் பதிலாக, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய எரிபொருள் நிறுவனங்களுடன் பேசி, தன்னிச்சையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் உலகளாவிய சந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தாமல், உள்நாட்டில் டீசல் இருப்பை அதிகரிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.