Posted in

பாகிஸ்தான் தடை தொடரும் நிலையில்: சீனாவுடன் மாற்று வான்வழி குறித்து இந்தியா பேச்சு!

பாகிஸ்தான் தனது வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதித்துள்ள தடையைத் தொடர்ந்து நீட்டித்து வரும் நிலையில், சீனாவுடன் இணைந்து மாற்று வான்வழியை அமைப்பது தொடர்பாக இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். சீன நாட்டின் சின்ஜியாங் (Xinjiang) பகுதியில் உள்ள ஹோட்டன் (Hotan) வான்வழியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவது குறித்து இருநாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

கடந்த 2025 ஏப்ரல் மாதம் முதல் இந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் தனது வான்வெளியைப் பூட்டியுள்ளதால், மேலைநாடுகளுக்குச் செல்லும் இந்திய விமானங்கள் அரபிக் கடல் வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்களின் பயண நேரம் சுமார் இரண்டு மணி நேரம் வரை அதிகரிப்பதுடன், எரிபொருள் செலவு மற்றும் பராமரிப்புச் செலவுகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. இந்த கூடுதல் செலவைக் குறைக்கவும், பயண நேரத்தைச் சேமிக்கவும் மாற்றுப் பாதைகளைக் கண்டறியும் முயற்சியில் இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

டெல்லி மற்றும் மும்பையில் இருந்து புறப்படும் விமானங்கள் லே (Leh) பகுதி வழியாகச் சென்று, கிற்கிஸ்தான் மற்றும் சீனாவின் சின்ஜியாங் வான்வழியை இணைக்கும் வகையில் புதிய பாதை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. எல்லை மோதல்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் சீனா இடையிலான இராஜதந்திர உறவுகள் சீரடைந்து வரும் சூழலில் இத்தகைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் புதிய வான்வழியைப் பயன்படுத்துவது தொடர்பாகச் சீனாவுடன் இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே வான்வழிப் போக்குவரத்து மற்றும் கட்டுப்பாட்டு அறைகளின் ஒருங்கிணைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே இந்தப் புதிய பாதை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சின்ஜியாங் வான்வழியைப் பயன்படுத்தச் சீனா அனுமதி அளிக்கும் பட்சத்தில், சர்வதேசப் வழித்தடங்களில் இயங்கும் இந்திய விமான நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய நிதிப் நிவாரணமாக அமையும்.