இந்திய விளையாட்டு வரலாற்றில் மிக முக்கிய நாளாக, ஒரே நாளில் நான்கு சர்வதேச முக்கிய போட்டிகளில் இந்திய அணிகள் விளையாடவுள்ளன. கிரிக்கெட், ஹாக்கி மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுகளில் இந்திய பிரதிநிதிகள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர். ஒரே நாளில் பல்வேறு முக்கிய தொடர்களின் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறுவது விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் போட்டியாக ஏசியன் கேம்ஸ் 2026 ஆடவர் கிரிக்கெட் தொடரின் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. அதே நாளில், ஏசியன் கேம்ஸ் ஆடவர் ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, மலேசிய அணியை எதிர்த்துப் தங்கப் பதக்கத்திற்காகக் களமிறங்குகிறது.
நான்காவது போட்டியாக சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றுள்ள சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் இந்திய கால்பந்து அணி, உலகின் பலம் வாய்ந்த பிரேசில் அணியை எதிர்கொள்கிறது. சர்வதேச கால்பந்து தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரேசில் அணியை, 138-வது இடத்தில் உள்ள இந்திய அணி முதன்முறையாக எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய போட்டிகளில் பனாமா மற்றும் தஜிகிஸ்தான் அணிகளுக்கு எதிராகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கால்பந்து அணி மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நான்கு போட்டிகளும் இந்திய நேரப்படி காலையில் தொடங்கி இரவு வரை அடுத்தடுத்து நடைபெறவுள்ளதால், விளையாட்டு உலகிற்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துப் போட்டிகளையும் நேரலையில் காண விளையாட்டு ரசிகர்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.