மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஐந்து முன்னணி போட்டி நிறுவனங்கள், தங்களது ரகசியத் தரவுகளைப் பிறருக்குப் பகிராமல் கூட்டாக இணைந்து புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மாடலை உருவாக்கியுள்ளன. அப்வி (AbbVie), அஸ்டெக்ஸ், பிரிஸ்டல் மையர்ஸ் ஸ்கிவிப், ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் டகெடா (Takeda) ஆகிய நிறுவனங்கள் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்துடன் இணைந்து ‘AISB-1-Fed’ என்ற ஏஐ மாடலை உருவாக்கியுள்ளன.
‘ஃபெடரேட்டட் லேர்னிங்’ (Federated learning) என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, சுமார் 20,000-க்கும் மேற்பட்ட மூலக்கூறு அமைப்புகளை உள்ளடக்கி 10 வாரங்களுக்குள் இந்த ஏஐ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் உள்ள மாடல்களை விட இந்த ஏஐ மாடல் 52.1 சதவீத துல்லியமான கணிப்புகளை வழங்கி, சோதனை முடிவுகளில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியுள்ளது. நிறுவனங்கள் தங்கள் ரகசிய மூலக்கூறு வடிவமைப்புகளை எவருக்கும் வெளிப்படுத்தாமல், கூட்டாக ஏஐ மாடலை மேம்படுத்தியுள்ளது மருந்து ஆராய்ச்சித் துறையில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் மற்றும் சர்வதேச மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த முயற்சியைப் பாராட்டியுள்ளனர். வணிகப் போட்டி இருந்தபோதிலும், நிறுவனங்களின் ரகசியத் தரவுகள் பாதுகாக்கப்பட்டு கூட்டுப் பணியின் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகியுள்ளது ஏஐ துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது இந்த ஏஐ மாடலின் செயல்திறன் குறித்த விரிவான ஆய்வறிக்கைகள் சுயாதீன நிபுணர்களின் மதிப்பீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன. வரும் நாட்களில் பிற தொழில்நுட்ப மற்றும் மருந்து தயாரிப்புத் துறைகளிலும் இந்த ஃபெடரேட்டட் லேர்னிங் முறையைப் பயன்படுத்தி புதிய ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது.