கரூர் அரவக்குறிச்சியில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடி பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்த வழக்கில், திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் செல்வக்குமரனிடம் விசாரணை நடத்தப்பட்டதைக் கண்டித்து அதிமுக தொண்டர்கள் தாராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
சேலத்தில் இருந்து கரூருக்கு உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பணத்தை அரவக்குறிச்சியில் காவல்துறையினர் சோதனையின் போது பறிமுதல் செய்தனர். பிடிபட்ட சுப்பிரமணி என்பவரிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், அந்தப் பணம் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அதிமுக மாவட்ட செயலாளர் செல்வக்குமரனிடம் ஒப்படைக்க எடுத்து வரப்பட்டதாக அவர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தாராபுரம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக இந்தப் பணம் கொண்டு வரப்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மாவட்ட செயலாளர் செல்வக்குமரனைத் தாராபுரம் காவல் நிலையத்திற்கு வரவழைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இத்தகவல் அறிந்ததும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விசாரணை நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டி தாராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் நிலையத்தின் முன் திரண்ட தொண்டர்கள் காவல்துறையினருக்கு எதிராகக் முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் காவல் துறை உயர் அதிகாரிகள் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி, நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடி பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பணத்தின் பின்னணி மற்றும் உரிமையாளர் குறித்த சட்டப்பூர்வ விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தாராபுரம் தொகுதியில் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளைத் தேர்தல் பறக்கும் படையினர் பலப்படுத்தியுள்ளனர்