தென்சென்னையின் ஓ.எம்.ஆர் (OMR) மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) வழித்தடங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், 6 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. 2026-27-ஆம் ஆண்டிற்கான சென்னைச் சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (CRIDP) கீழ் முன்னுரிமை அடிப்படையில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ள இப்பகுதிகளில் வாகனப் போக்குவரத்தைச் சீரமைப்பதே இத்திட்டங்களின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டங்களின் கீழ், பெருங்குடி மற்றும் எஸ்.ஆர்.பி டூல்ஸ் (SRP Tools) சந்திப்புகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ரூ.113.80 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலங்கள் அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டு, 18 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓ.எம்.ஆர் – திருப்போரூர் வழித்தடத்தில் 2.6 கிலோமீட்டர் தொலைவிற்குச் சாலையை அகலப்படுத்த ரூ.37.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனுடன், 25 கிலோமீட்டர் நீள ஓ.எம்.ஆர் மொபிலிட்டி காரிடார் மற்றும் 7.4 கிலோமீட்டர் நீள பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளைச் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) தயாரித்து வருகிறது.
இந்த 6 முக்கிய உள்கட்டமைப்புப் பணிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும்போது, தினமும் ஓ.எம்.ஆர் மற்றும் ஈ.சி.ஆர் சாலைகளில் பயணிக்கும் லட்சக்கணக்கான ஐ.டி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயண நேரம் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகப் பெருங்குடி சந்திப்பில் எம்.ஜி.ஆர் பிரதான சாலையிலிருந்து சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்குத் தடையற்ற பாதை கிடைப்பதுடன், சென்னை விமான நிலையம் மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளும் நெரிசலின்றி விரைவாகச் சென்றடைய முடியும்.
இதற்கிடையில், சோழிங்கநல்லூர் பகுதியையும் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள கோவளம் பகுதியையும் நேரடியாக இணைக்கும் புதிய இணைப்புச் சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கத் தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை பணிகள் நிறைவடைந்தவுடன் இதற்கான மொத்தச் செலவினம் இறுதி செய்யப்பட்டு, அடுத்தகட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.