இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகிய இருவரும் மீண்டும் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இணைவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் முறையான பயிற்சிகளுக்குத் திரும்பும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) மறுவாழ்வுப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த ஹர்திக் பாண்டியா, செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற ஆட்டப் பயிற்சியின் போது வலது கெண்டைக்காலில் (right calf) அசௌகரியம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட எம்.ஆர்.ஐ (MRI) பரிசோதனையில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவருக்கு விட்டமின்-டி மாத்திரைகள் மற்றும் சிறப்பு சிகிச்சைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. சுமார் 6 முதல் 8 வாரங்கள் வரை அவருக்கு இந்த சிகிச்சைகள் தொடரும் என்பதால், களத்திற்குத் திரும்புவதில் காலதாமதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா, கடந்த செப்டம்பர் 7 அன்று நடைபெற்ற பயிற்சியின் போது இடது தொடையில் தசைப்பிடிப்பு காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். 3 வாரக் கட்டுப்பாடான பயிற்சிகளுக்குப் பிறகு அவர் பந்துவீச்சை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அவருக்குக் காய்ச்சல், தொண்டை வலி மற்றும் சளி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது மறுவாழ்வுப் பயிற்சித் திட்டமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்திய அணி அக்டோபர் மாத பிற்பகுதியில் நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடத் திட்டமிட்டுள்ளது. முக்கியப் போட்டிகள் நெருங்கி வரும் சூழலில், இந்த இரு முக்கிய வீரர்களின் உடல்தகுதி பின்னடைவு குறித்து மருத்துவக் குழுவினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். முழுமையாகக் குணமடைந்த பிறகே இரு வீரர்களும் மீண்டும் தீவிரப் பயிற்சிகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்று அணி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.