பிரிட்டன் மற்றும் மேற்கத்திய நாடுகளின் மிக முக்கியமான தரவு மையங்களை (Data Centres) இலக்கு வைத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நடத்தத் திட்டமிட்டுள்ள சதிச் செயல்களால், லட்சக்கணக்கான மக்களின் வங்கிச் சேமிப்பு ஆவணங்கள், மருத்துவக் குறிப்புகள் மற்றும் தனிநபர் தகவல்கள் கணநேரத்தில் அழிக்கப்படக்கூடிய பேரபாயம் நிலவுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியப் புலனாய்வு மற்றும் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, பிரிட்டனின் வங்கித் துறை, தேசிய சுகாதார மையம் (NHS) மற்றும் அரசுத் துறைகளின் டிஜிட்டல் தகவல்கள் பாதுகாக்கப்படும் மேகக்கணி தரவு மையங்கள் (Cloud Data Centres) மீது ரஷ்யா நேரடி தாக்குதல் அல்லது சைபர் தாக்குதல்களை நடத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது. கடலுக்கு அடியில் அமைந்துள்ள முக்கியத் தகவல் தொடர்பு கேபிள்களைத் துண்டிப்பதன் மூலமும், மின்தடை (Blackout) ஏற்படுத்துவதன் மூலமும் முழுமையான ‘டிஜிட்டல் முடக்கத்தை’ ஏற்படுத்த ரஷ்ய உளவு அமைப்புகள் வியூகம் வகுத்துள்ளன.
உக்ரைன் போரில் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அளித்து வரும் தொடர் ராணுவ உதவிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஐரோப்பிய நாடுகளின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கும் நோக்கில் இத்தகைய ‘சபோடேஜ்’ (Sabotage) தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளன. தரவு மையங்கள் செயலிழந்தால், பொதுமக்கள் தங்களின் வங்கி கணக்குகளை அணுக முடியாமலும், மருத்துவமனைகளில் நோயாளிகளின் முந்தைய சிகிச்சைப் பதிவுகள் கிடைக்காமலும் மிகப்பெரிய நிருவாகச் சீர்குலைவு ஏற்படும் எனக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகைய சாத்தியமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் பொருட்டு, பிரிட்டன் அரசாங்கம் தனது முக்கியத் தரவு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஆயுதம் தாங்கிய ராணுவப் பாதுகாப்பையும், அதிநவீன சைபர் பாதுகாப்பு வளையங்களையும் பலப்படுத்தியுள்ளது. இருப்பினும், ஒரே நேரத்தில் பல டேட்டா சென்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதைத் தடுப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ராணுவ வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.