Posted in

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வீழ்த்த எச்சரிக்கை: விண்வெளிப் போர் உருவாகும் என ரஷ்யா மிரட்டல்

ரஷ்யாவின் ‘ராஸ்வெட்’ செயற்கைக்கோள் திட்டத்தைத் தடை செய்ய முயன்றால், அது முழு அளவிலான விண்வெளிப் போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கத்திய நாடுகளின் இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக இலான் மாஸ்கின் ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள்கள் சுட்டு வீழ்த்தப்படலாம் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி, ரஷ்யாவின் ‘ராஸ்வெட்’ செயற்கைக்கோள் கட்டமைப்புக்கு உதவக்கூடும் நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மெத்வதேவ், ரஷ்ய செயற்கைக்கோள் திட்டத்தைத் முடக்குவது அதை அழிப்பதற்குச் சமம் என்றும், அது விண்வெளியில் பெரிய மோதலை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், விண்வெளியில் மோதல் ஏற்பட்டால் தாழ்வட்டப் பாதையில் இயங்கும் அமெரிக்காவின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அனைத்தும் காய்ந்த மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போலக் கீழே விழும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விண்வெளி என்பது மிகவும் குறுகிய மற்றும் முக்கியமான இடம் என்பதால், அனைத்து நாடுகளும் பரஸ்பர மரியாதையுடனும் நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் போரில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொடர்பு முக்கியப் பங்கு வகித்து வரும் சூழலில், ரஷ்யாவின் இந்தத் தீவிர எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ரஷ்யாவின் இந்த மிரட்டல்கள் குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பின் தரப்பில் நிலவரங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.