Posted in

ஜிடிஏ 6 பாணியில் டிரம்ப் ஆட்சி குறித்த போஸ்டரைப் பகிர்ந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance), ‘கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6’ (GTA 6) வீடியோ கேம் பாணியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சியைச் சித்தரிக்கும் புகைப்படத்தை எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் நவம்பர் 19-ஆம் தேதி பகிர்ந்துள்ளார். டிரம்பின் 47-வது அதிபர் பதவிக்காலத்தைக் குறிக்கும் வகையில் ‘தி கோல்டன் ஏஜ் XLVII’ (The Golden Age XLVII) என்ற தலைப்புடன், “பொற்காலம் இப்போது தொடங்கிவிட்டது” (The Golden Age is now) என அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளியிடப்பட்ட அந்தப் படத்தில் டிரம்ப் மற்றும் ஜே.டி. வான்ஸ் அருகருகே நிற்பது போலவும், பின்னணியில் அமெரிக்க ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் வெள்ளை மாளிகை தொடர்பான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. முன்னதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் 2014-க்கு முந்தைய மற்றும் தற்போதைய இந்தியாவின் வளர்ச்சியை ஒப்பிட்டு, ‘ஜிடிஏ 6’ பாணியிலான ஏஐ (AI) பதிவை “இந்தியா முற்றிலும் புதிய ஆட்டத்தை ஆடுகிறது” என்ற தலைப்புடன் பகிர்ந்திருந்தார்.

ஜே.டி. வான்ஸின் இந்தப் பதிவுக்குச் சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர். நாட்டில் பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற பிரச்சினைகள் இருக்கும்போது இதனைப் பொற்காலம் எனக் கூறுவது பொருத்தமற்றது என்றும், வீடியோ கேம் வெளியீட்டை அரசியலாக்குவதாகவும் பயனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக, ஜிடிஏ 6 கேம் வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்பாக வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ கணக்கிலும் டிரம்பின் 30 வினாடி வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டிருந்தது. உலகளவில் ஜிடிஏ 6 வெளியாகி கவனம் பெற்றுள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் இந்தச் சமூக வலைதளப் பதிவுகள் இணையத்தில் தொடர்ந்து விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன.