தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை புகாரில், திட்டமிட்டுப் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் ஆடியோ உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகிப் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு மாசாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண்ணின் குரல் அடங்கிய இந்த ஆடியோவில், புகாரைப் பயன்படுத்தி நிதிப் பலன் அடையத் திட்டமிடப்பட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை 23-ஆம் தேதி, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான விஜய் மோகன் தனக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக அப்பெண் ஆற்காடு நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இச்சம்பவம் சட்டமன்றம் மற்றும் அரசியல் பிரச்சாரக் களங்களில் பிரதான விவாதப் பொருளாக உருவெடுத்தது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஆடியோ உரையாடலில், அப்பெண்ணும் அவரது கணவர் நவீனும் சிலருடன் இணைந்து நிதி கோருவது போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் மோகனை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகச் சம்மந்தப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் நவீன் மீது ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வெளியான ஆடியோ பதிவுகளின் உண்மைத்தன்மை, அவை பதிவு செய்யப்பட்ட சூழல் மற்றும் அப்பெண்ணின் பின்னணியில் செயல்பட்ட நபர்கள் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது புகார் அளித்த பெண் மற்றும் அவரது கணவர் தலைமறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறம் விஜய் மோகன் மீதான பாலியல் புகார் விசாரணையும், மறுபுறம் மிரட்டிப் பணம் பறித்தல் தொடர்பான விசாரணையும் தீவிரமடைந்துள்ளதால் ராணிப்பேட்டை அரசியல் வட்டாரத்தில் இச்சம்பவம் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.