அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடனான ராணுவப் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் தல்நகர் தஹ்ரானில் பெண் தன்னார்வலர்களுக்கு அடிப்படைத் துப்பாக்கி மற்றும் ராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தஹ்ரானில் உள்ள இமாம் ஹொசைன் சதுக்கத்தில் அமைக்கப்பட்ட சிறப்புப் பயிற்சி மையத்தில் ஈரானியப் பெண்கள் ஆயுதங்களைக் கையாளும் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.
‘ஜான்ஃபதா’ (Janfada – நாட்டிற்காகத் தியாகம் செய்வோர்) என்ற மக்கள் திரள் ஒருங்கிணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ராணுவக் பயிற்சிப் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கீழ் இயங்கும் ‘பசீஜ்’ (Basij) அமைப்பினால் வழிநடத்தப்படும் இத்திட்டத்தில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இணைந்துள்ளதாகத் தஹ்ரான் பகுதி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வாரத்திற்கு மூன்று நாட்கள், தினமும் மூன்று மணி நேரம் நடைபெறும் இந்த வகுப்புகளில் கலந்துகொள்ளும் பெண்களுக்குத் துப்பாக்கி சுடுதல் மற்றும் அடிப்படை அவசரகாலச் செயல்பாடுகள் கற்பிக்கப்படுகின்றன.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சாத்தியமான நகரப்புற மோதல்களை எதிர்கொள்ளவும் குடிமக்களுக்குத் தேவையான தயார்நிலையை வழங்குவதே இதன் நோக்கம் என்று ஈரானிய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதேவேளையில், சர்வதேச மட்டத்தில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், பொதுமக்களை, குறிப்பாகப் பெண்களை ராணுவப் பயிற்சிகளில் ஈடுபடுத்தும் ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது தஹ்ரான் மையத்தில் தொடங்கியுள்ள இந்தத் தன்னார்வ ராணுவப் பயிற்சி திட்டம், அடுத்தடுத்த கட்டங்களாக நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் ஈரானியப் படைகள் மற்றும் துணை ராணுவப் பிரிவினர் தங்களது தயார்நிலையைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.