Posted in

தளபதி செர்ஜி சுரோவிகினை மீண்டும் களமிறக்க புடின் திட்டம்: சர்வதேச ஊடகங்கள் தகவல்

வாக்னர் கூலிப்படை கலகத்திற்குப் பிறகு பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பிரபல ரஷ்ய ஜெனரல் செர்ஜி சுரோவிகினை, உக்ரைன் போரில் மீண்டும் பயன்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜென்னல் அர்மகெடான்’ (General Armageddon) என்று அழைக்கப்படும் சுரோவிகின் மீண்டும் மாஸ்கோவிற்குத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிரியா போரில் கடுமையான தாக்குதல்களை நடத்தியதற்காக அறியப்பட்ட சுரோவிகின், 2022-ஆம் ஆண்டில் உக்ரைனில் ரஷ்யப் படைகளின் தலைமைத் தளபதியாகச் செயல்பட்டார். எனினும், கடந்த 2023-ஆம் ஆண்டு எவ்கேனி பிரிகோஜின் தலைமையில் நடைபெற்ற வாக்னர் கூலிப்படை கலகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி, அவர் தனது பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு ஆப்பிரிக்கப் பகுதி சார்ந்தப் பணிகளுக்கு அனுப்பப்பட்டார். தற்போது கிழக்கு உக்ரைனில் ஸ்லாவியான்ஸ்க் மற்றும் கிராமடோர்ஸ்க் நகரங்களைக் கைப்பற்றும் நோக்கில் அவரை மீண்டும் களமிறக்கத் திட்டமிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

சுரோவிகின் மீண்டும் நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் குறித்துக் கிரெம்ளின் அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், உக்ரைனில் முன்னணிப் போர்க் களங்களில் ரஷ்யப் படைகள் எதிர்கொண்டு வரும் தடங்கல்களைச் சரிசெய்யவும், உத்திகளை மாற்றியமைக்கவும் சுரோவிகின் போன்ற அனுபவமிக்க அதிகாரிகளின் சேவை ரஷ்யாவிற்குத் தேவைப்படுவதாக ராணுவப் பகுப்பாய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் புடின் தரப்பில் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், சுரோவிகினின் வருகை உக்ரைன் போரின் அடுத்தகட்ட நகர்வுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது. அதேவேளையில், உக்ரைனியப் படைகளும் எல்லைப் பகுதிகளில் தங்களது எதிர் தாக்குதல்களையும் ட்ரோன் கண்காணிப்புகளையும் தீவிரப்படுத்தியுள்ளன.