பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை இரவோடு இரவாகக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்ததற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக அரசு வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு போராடும் செவிலியர்களின் முதுகில் குத்துவதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் விமர்சித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தின் போது, பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகக் கூறி பிரதிநிதிகளையும், பின்னர் களத்தில் இருந்த செவிலியர்களையும் காவல்துறையினர் கைது செய்ததாகக் கூறப்படுகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அமைதியாகப் போராடியவர்களைக் கைது செய்த நடவடிக்கை, தவெக அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் காட்டுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆதரவு தெரிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகளை மறப்பது துரோக நடவடிக்கை என மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கை குறித்து எதிர்ப்பைப் பதிவு செய்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா?” என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண் செவிலியர்களை நோக்கிப் பெண் காவல் அதிகாரி ஒருவர் மிரட்டும் தொனியில் பேசியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்தும் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட செவிலியர்களை உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளும் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.