துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘ஃப்ளை துபாய்’ (flydubai Flight 1073) பயணியர் விமானத்தை, 9/11 பாணி தீவிரவாதத் தாக்குதல் அச்சம் காரணமாகச் சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ராணுவம் தயாராக இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் காக்பிட்டில் (Cockpit) விமானி தாக்கப்பட்டதில் விமானம் சுமார் 14,000 அடிகள் திடீரெனக் கீழே இறங்கியதைத் தொடர்ந்து இந்த அவசர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானியான ஹமாம் அல்-ஹம்மாமி (Hamam al-Hammami), கேப்டன் ஸ்மித் மச்சார் (Smit Machchhar) என்பவரைக் கத்தியால் தாக்கி விமானத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றுள்ளார். கோக் பிட்டில் நடந்த இந்தத் தாக்குதலால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே சரிந்தபோது, இஸ்ரேல் வான்படை கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொள்ள முயன்றும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து இஸ்ரேல் வான்வெளியை உடனடியாக மூடிய அதிகாரிகள், அவசரக் கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து தாக்குதல் போர் விமானங்களை (Fighter Jets) உடனடியாக அனுப்பி வைத்தனர்.
இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் (Ben Gurion Airport) மோதி அழிக்கத் திட்டமிட்டதாகக் கைதான ஓமன் நாட்டுத் துணை விமானி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. 150-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த அந்த விமானம் இஸ்ரேல் எல்லையை நெருங்கியிருந்தால், அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உத்தரவின் பேரில் அது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பயணிகள் மற்றும் மாற்று விமானிகளின் உதவியுடன் தாக்குதல் நடத்தியவர் கட்டுப்படுத்தப்பட்டு, விமானம் சவூதி அரேபியாவின் தபூக் (Tabuk) நகருக்குத் திருப்பி விடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட அந்த விமானத்தில் இருந்த தாக்குதலாளியிடம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேலின் ஷின் பெட் (Shin Bet) உளவு அமைப்புகள் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. தனிநபராக இத்தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது இதில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்து உளவுத்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.