பின்லாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் மர்ம நபர்கள் சட்டவிரோதமாக ஊடுருவி, கழிவறைகளில் மனிதக் கழிவுகளை விட்டுச் சென்று அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 20-க்கும் மேற்பட்ட ஃபின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் இத்தகைய மர்மமான ஊடுருவல்கள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்களின் பின்னணியில் ரஷ்யாவின் உளவு அமைப்புகள் இருக்கக்கூடும் என்று பின்லாந்து அரசியல் தலைவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
வீட்டின் கதவுகள் உடைக்கப்படாமலும், எவ்விதப் பொருட்களும் திருடப்படாமலும் இந்த ஊடுருவல்கள் அரங்கேறியுள்ளதாக பின்லாந்து நாடாளுமன்றச் சபாநாயகர் யுஸ்ஸி ஹல்லா-அஹோ தெரிவித்துள்ளார். பின்லாந்து நாட்டின் ஆளும் தேசியக் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மூத்த எம்பி பென் ஜிஸ்கோவிச் இது குறித்துப் பேசுகையில், “அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் தங்களது தீவிரக் கண்காணிப்பில் இருப்பதை உணர்த்தி, பயத்தையும் குழப்பத்தையும் உருவாக்கவே ரஷ்ய உளவுத்துறை இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார். பனிப்போர் காலத்தில் எதிரிகளை உளவியல் ரீதியாக அச்சுறுத்த ரஷ்ய உளவு அமைப்புகள் பயன்படுத்திய அதே உத்தி தற்போது மீண்டும் பயன்படுத்தப்படுவதாக மேலைநாட்டு உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பின்லாந்து நேட்டோ (NATO) அமைப்பில் இணைந்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவுடனான 1,340 கிலோமீட்டர் எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஃபின்லாந்தில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் அந்நாட்டின் ஜனநாயக நிலைத்தன்மையைக் குலைக்க ரஷ்யா முயல்வதாக ஃபின்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்த ஊடுருவல் சம்பவங்களில் ரஷ்யாவிற்குத் நேரடித் தொடர்பு உள்ளது என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இன்னும் உறுதியாக நிறுவப்படவில்லை.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கி காவல்துறையும், தேசிய புலனாய்வுப் பணியகமும் இணைந்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்குப் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதோடு, அனைத்து எம்பிக்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ரஷ்ய அரசின் தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கப்படவில்லை.