தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் கு. சரவணன் மீது ஆதிதிராவிடர் நலவாரிய உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்று ஏமாற்றியதாகப் புகார் எழுந்துள்ளது. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த வைணவப் பெருமாள் என்பவர், எம்எல்ஏ சரவணன் முன்பணமாக ரூ.60 ஆயிரம் வாங்கி ஏமாற்றியதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஊழலற்ற ஆட்சி நடத்துவதாகக் கூறுபவர்களின் உண்மை முகம் இதன் மூலம் வெளிவந்துள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு என்ற பெயரில் மருத்துவரை அவமதித்த சர்ச்சையிலும் இதே நபர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் சுட்டிக்காட்டியுள்ளார். தனது தொகுதி மக்களின் நலனுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த எம்எல்ஏ மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தவெக எம்எல்ஏ சரவணன் மற்றும் கட்சித் தலைமை தரப்பில் இருந்து இதுவரை முறையான விளக்கங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படவில்லை. இருப்பினும், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவின் அடிப்படையில் காவல் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை அல்லது லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிப்பது குறித்து பாதிக்கப்பட்ட நபர் பரிசீலித்து வருகிறார். மக்கள் பிரதிநிதி மீது சுமத்தப்பட்டுள்ள லஞ்சக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலை விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.