Posted in

வானில் நாளை தோன்றும் பீவர் சூப்பர் மூன்: இரவு 8.23 மணிக்கு முழு ஒளி

வானில் நாளை (நவம்பர் 24) ‘பீவர் சூப்பர் மூன்’ எனப்படும் பிரமாண்ட முழு நிலவு தோன்றவுள்ளதாக பிர்லா கோளரங்க வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி நாளை இரவு 8.23 மணிக்கு நிலவு தனது முழுமையான ஒளியை அடையும் நிலையில், சூரியன் மறைவுக்குப் பிறகு கிழக்கு வானில் நிலவு உதிக்கும்போது இதனைத் தெளிவாகக் காண முடியும்.

நிலவு தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் (சுமார் 3,60,765 கி.மீ தொலைவில்) வருவதால், வழக்கமான முழு நிலவை விட சுமார் 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிகப் பிரகாசமாகவும் காட்சியளிக்கும். குளிர்காலத்திற்கு முன்பாக நீர்நாய்கள் (beavers) தங்களின் இருப்பிடங்களைத் தயார்படுத்தும் காலத்தில் தோன்றும் முழு நிலவு பாரம்பரியமாக ‘பீவர் சூப்பர் மூன்’ என அழைக்கப்படுகிறது.

இந்த வானியல் நிகழ்வைக் காணத் தொலைநோக்கி எதுவும் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானம் மேகமூட்டமின்றித் தெளிவாக இருந்தால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வெறும் கண்களாலேயே இந்த முழு நிலவைப் பார்த்து ரசிக்கலாம்.

அடுத்தடுத்து வரவிருக்கும் சூப்பர் மூன் வரிசையில் இது முதல் நிகழ்வாக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 24-ஆம் தேதியும் மற்றொரு சூப்பர் மூன் வானில் தோன்றும் என பிர்லா கோளரங்க வானியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.