இந்தியாவில் ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்து எக்ஸ் (X) தள உரிமையாளரும் தொழிலதிபருமான எலான் மாஸ்க் கேள்வி எழுப்பியிருந்தார். “165-க்கும் மேற்பட்ட நாடுகளில் அனுமதி பெற்றுள்ள நிலையில் இந்தியாவில் இன்னும் அனுமதி கிடைக்காதது ஏன், முகேஷ் அம்பானிதான் இந்தியாவின் உண்மையான பாஸ் -ஆ?” என அவர் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவிற்குப் பதிலளித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவிற்கு வரவேற்கிறேன் எலான், மற்றொரு நபரைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வரை காத்திருங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்தப் பதிலுக்கு உடனடியாக மறுமொழியளித்த எலான் மாஸ்க், “நன்றி ராகுல், இது உண்மையிலேயே கவலையளிக்கும் விஷயம்” என்று பதிவிட்டுள்ளார். ஸ்டார்லிங்க் சேவைக்கு அனுமதி மறுக்கப்படுவதற்குப் பின்னால் சில தொழிலதிபர்களின் முற்றுரிமை மேலாதிக்கம் இருப்பதாக மாஸ்க் குற்றம் சாட்டியிருந்தார். இருப்பினும், தொலைத்தொடர்பு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளதுடன், நாட்டின் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் உள்நாட்டமைச்சகத்தின் அனுமதி நடைமுறைகளே இதற்குக் காரணம் எனக் விளக்கம் அளித்துள்ளது.
அரசு தரப்பில் மத்திய தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி கூறுகையில், தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் தற்காலிக உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டமைச்சகத்தின் பாதுகாப்புச் சான்று கிடைத்தவுடன் இறுதி அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த விவகாரம் குறிப்பிட்ட ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்காகத் தாமதப்படுத்தப்படவில்லை என்றும், அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளே பின்பற்றப்படுவதாகவும் அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் சாட்காம் (Satcom) சேவைக்கான அனுமதி பெறுவதில் ஸ்டார்லிங்க், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் போட்டி போட்டு வரும் நிலையில், இந்த எக்ஸ் தள விவாதம் அரசியல் மற்றும் தொழில் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு அனைத்து நிறுவனங்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.