குவாத்தமாலா நாட்டின் எல் ஜோகோட் (El Jocote) பகுதியில் வசித்து வரும் யூலீடி இஸ்கோட்டோயாக் (Yuleidy Ixcotoyac) என்ற 15 வயது சிறுமி, காரில் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கிச் சரிந்துள்ளார். சுவிசேஷ போதகராக உள்ள அவரது தந்தை ஆபிரகாம் இஸ்கோட்டோயாக், உடனடியாகக் காரை நிறுத்திவிட்டுச் சோதித்தபோது மகளுக்கு நாடித்துடிப்பும் மூச்சுயிர்ப்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.
எனினும், மருத்துவர்கள் யாரும் முறைப்படி பரிசோதித்து இறப்பை உறுதி செய்யாத நிலையிலும், மரண சான்றிதழ் பெறப்படாமலேயே குடும்பத்தினர் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர்.
வீட்டில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது, சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்த சிறுமி திடீரெனக் கண் விழித்து எழுந்து பேசத் தொடங்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சத்தமிட்டுக் கூச்சலிட்டனர். தான் பிழைத்திருப்பது ஒரு “அதிசயம்” என அந்தச் சிறுமி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகள் உலக அளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. முறையான மருத்துவப் பரிசோதனை இல்லாமல் அவசரமாக இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட விதம் குறித்துப் பலரும் விவாதங்களை எழுப்பி வருகின்றனர்.