Posted in

போப் லியோவிற்கு நுரையீரல் புற்றுநோய் உறுதி: வலது நுரையீரலின் ஒரு பகுதி அகற்றம்

ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் 71 வயதான போப் லியோவிற்கு அவரது நுரையீரலில் கண்டறியப்பட்ட நோடுல் கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு நுரையீரல் அடினோகார்சினோமா (Lung Adenocarcinoma) என்ற புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக வத்திக்கான் மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவரது வலது நுரையீரலின் கீழ் பகுதி (lower lobe) அகற்றப்பட்டுள்ளது.

சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை எந்தவித சிக்கல்களும் இன்றி வெற்றிகரமாக முடிவடைந்ததாகப் புனித அரியணை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு போப் லியோ இயல்பு நிலைக்குத் திரும்பித் தனது அறைக்களில் ஓய்வெடுத்து வருவதாகவும், அவர் உடல் நலம் தேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புற்றுநோய் பாதிப்பு ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால், அவர் விரைவில் முழுமையான நலம் பெறுவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு போப் லியோ வழக்கமான மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்றும், அவர் முழுமையாகக் குணமடைய சுமார் ஒரு வார காலம் மருத்துவமனையில் ஓய்வெடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.