சர்வதேச நிதி ஸ்திரத்தன்மை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள பன்னாட்டு நிதியம், உலகப் பொருளாதார எதிர்காலம் மற்றும் சந்தைகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்துக் கவலை தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் நிதி நிறுவனங்கள் மற்றும் சந்தைக் கட்டமைப்புகள் மீது அதிநவீன செயற்கை நுண்ணறிவு முறைகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் இணையவழித் தாக்குதல்களின் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
விரைவான டிஜிட்டல் மயமாக்கல் காரணமாகத் தாக்குதலுக்கு உள்ளாகும் பரப்பளவு பெருமளவு அதிகரித்துள்ளதாகவும், இது போன்ற கடுமையான சம்பவங்கள் சந்தையின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் என்றும் நிதியத்தின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முக்கிய நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கும் பட்சத்தில், அது ஒட்டுமொத்த உலகளாவிய பொருளாதாரத்திலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் துணையோடு நடத்தப்படும் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நிதி நிறுவனங்கள் உடனடியாகப் பலப்படுத்த வேண்டும் எனப் பன்னாட்டு நிதியம் வலியுறுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் பொருளாதார மற்றும் தொழில்நுட்பச் சவால்களைச் சமாளிக்கும் வகையில் உலக நாடுகள் முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.