Posted in

செயற்கை நுண்ணறிவு மூலம் உயிரி ஆயுதத் தாக்குதல் ஆபத்து: பிரிட்டன் உளவுத்துறை தலைவர் எச்சரிக்கை

பிரிட்டனின் எம்.ஐ.5 பாதுகாப்பு சேவையின் தலைமை இயக்குநர் சர் கென் மெக்கல்லம் லண்டனில் ஆற்றிய ஆண்டறிக்கை உரையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தேசியப் பாதுகாப்புக்குக் கூடுதல் அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். தீவிரவாத அமைப்புகள் உளவு பார்க்கும் நடவடிக்கைகளுக்கும், தாக்குதல் நடத்தும் உத்திகளை மேம்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த முயன்றதைக் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், புதிய வகையிலான உயிரி ஆயுதங்களை உருவாக்குவதற்கும், செயற்கை நுண்ணறிவு இயங்கும் ட்ரோன்களை இயக்குவதற்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு குறித்துப் பேசிய கென் மெக்கல்லம், மனிதர்களை விடவும் அறிவுக் கூர்மையுள்ள ஒரு காரணியை நாம் எதிர்கொள்வது வரலாற்றிலேயே இதுவே முதல்முறை எனக் குறிப்பிட்டார்.

பிரிட்டனை அச்சுறுத்துவதற்காக ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இணையவழிச் சைபர் தாக்குதல்கள் மற்றும் சதிச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். தீவிரவாதப் போக்கைக் கட்டுப்படுத்தவும், அச்சுறுத்தல்களைத் தடுக்கவும் பிரிட்டனின் செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து உளவுத்துறை செயலாற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறையில் உள்ள நிறுவனங்கள் உடனடியாகத் தங்களின் இணையப் பாதுகாப்பு வசதிகளைப் பலப்படுத்த வேண்டும் என்று கென் மெக்கல்லம் அறிவுறுத்தியுள்ளார் . செயற்கை நுண்ணறிவால் உருவாகும் ஆபத்துகளை முன்கூட்டியே கணித்துக் கண்காணிப்பதற்காக ‘ஏ.ஐ அச்சுறுத்தல் மதிப்பீட்டு மையம்’ என்ற புதிய அமைப்பும் தொடங்கப்பட்டுள்ளது.