அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஓபன்ஏஐ (OpenAI) தலைமையகத்தின் உயர் நிர்வாகக் கூட்ட அரங்கில், தொலைக்காட்சிப் பெட்டியின் பின்புறம் இரகசியமாகப் பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பதிவு சாதனம் ஒன்றை பாதுகாப்புப் பணியாளர்கள் செப்டம்பர் 30 அன்று கண்டறிந்தனர். இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ஃபெடரல் புலனாய்வு முகமை (FBI) நடத்திய விசாரணையில், அந்நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்த 35 வயதான சவூதி அரேபியக் குடிமகன் அப்துல்ரஹ்மான் அல்ஃபோசான் (Abdulrahman Alfozan) என்பவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அவர் மீது சட்டவிரோதமாகத் தகவல்களை இடைமறித்துப் பதிவு செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உடனடியாகப் பணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். விசாரணையில், அல்ஃபோசான் தனக்கு அனுமதி இல்லாத கூட்ட அரங்கிற்கு அருகில் பலமுறை நடமாடியது கண்காணிப்புக் கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், பதிவு சாதனத்தை எவ்வாறு உருவாக்குவது மற்றும் இரகசியமாகப் பொருத்துவது என்பது குறித்துத் தனது மனைவியின் சாட்பாட் (ChatGPT) கணக்கைப் பயன்படுத்தி அவர் தேடியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
எனினும், நிறுவனத்தின் மூலக் குறியீடுகள் (source code) அல்லது வாடிக்கையாளர்களின் தரவுகள் எதுவும் திருடப்படவில்லை என ஓபன்ஏஐ நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்கக் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அல்ஃபோசானுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 2,50,000 அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்படலாம்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஓபன்ஏஐ உட்பட முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் வளாகப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.