Posted in

நீருக்கடியில் இருந்து ஏவப்படும் ஏவுகணை சோதனையை நடத்திய வட கொரியா!

கொரியாவின் கிழக்குக் கடல் பகுதியில் (East Sea) கடந்த புதன்கிழமை அன்று வட கொரியா தனது நாட்டின் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து இரண்டு வகையான மூலோபாயக் க்ரூஸ் ஏவுகணை (Cruise Missile) சோதனைகளை நடத்தியதாகக் கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) தெரிவித்துள்ளது. நாட்டின் நீருக்கடியில் உள்ள போர் அமைப்புகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும், அணு ஆயுதத் தடுப்பு ஆற்றலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஹீரோ கிம் குன் ஓக்’ (Hero Kim Kun Ok) எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல் இந்தச் சோதனையின் போது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என வெளிநாட்டு வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பலின் மூலமாகப் பொதுவெளியில் நடத்தப்பட்ட முதல் ஆயுதச் சோதனை இதுவாகும்.

அமெரிக்கா மற்றும் தென்குரிய நாடுகளின் ராணுவ அழுத்தங்களை எதிர்கொள்ளும் வகையிலும், சர்வதேச அளவில் தனது ஆயுத பலத்தை வெளிப்படுத்தும் நோக்கத்திலுமே வட கொரியா தொடர்ச்சியான சோதனைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சோதனைகளின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து அண்டை நாடுகளான தென் கொரியாவும் ஜப்பானும் தீவிரமாகக் கண்காணித்து வருவதுடன், பிராந்தியப் பாதுகாப்பில் இது புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.