கோவையின் காந்திபுரத்தில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தைத்’ தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று நேரில் திறந்து வைக்கிறார்.
கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் சிறைத்துறைக்குச் சொந்தமான சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நவீன நூலகம் மற்றும் அறிவியல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மூலமாகக் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட வளாகத்தில் தரை தளத்துடன் சேர்த்து ஏழு தளங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் நவீன வாசிப்பு அறைகள், அரிய நூல்கள் பிரிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், டிஜிட்டல் நூலகம் மற்றும் அறிவியல் அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வருகை தரும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், காந்திபுரத்தில் உள்ள வளாகத்திற்குச் சென்று பெரியார் சிலத்தைத் திறந்து வைத்து இந்த அறிவுலகக் கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதனைத் தொடர்ந்து நூலகத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நவீன வசதிகள் மற்றும் அறிவியல் கண்காட்சிப் பகுதிகளை அவர் பார்வையிடுகிறார்.
இந்தத் திறப்பு விழாவை முடித்துக்கொண்டு, கோவை மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கும் அவர், பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதல்வரின் இந்தப் பயணத்தையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.