Posted in

சீட் கொடுக்கப் பணம் கேட்டுப் பேரம்: ஆடியோ விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ முஸ்தபா விளக்கம்!

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ முஸ்தபாவிற்கு அண்மையில் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், வார்டு மற்றும் பகுதி நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக எம்எல்ஏவின் வலது கரமாகக் கருதப்படும் கனி ராஜா மற்றும் சபரி செல்வம் ஆகியோர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில், குறிப்பிட்ட வார்டு பதவிக்குத் தொகையைப் பேரம் பேசுவது போன்ற உரையாடல்கள் இடம்பெற்றிருந்ததுடன், எம்எல்ஏ முஸ்தபாவிடம் பேசிவிட்டுப் பணத்துடன் வருமாறு கூறுவது போன்ற குரல்களும் பதிவாகியிருந்தன.

இந்த ஆடியோ விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த எம்எல்ஏ முஸ்தபா, இது முழுக்க முழுக்கத் திட்டமிடப்பட்ட சதி வேலை என்று மறுத்துள்ளார். இது மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியான பழைய ஆடியோ என்றும், தவெக அரசு மீது அவதூறு பரப்பும் நோக்கத்துடன் திமுகவினரே இதனைச் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், ஆடியோவில் பேசப்பட்ட நபர்களை நேரில் அழைத்து விசாரித்துள்ளதாகவும், தங்களது அரசு லஞ்சம் மற்றும் லாவண்யமற்ற ஆட்சியை வழங்கி வருவதால் எதிர்க்கட்சியினர் இது போன்ற பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மதுரை தொகுதியில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தவெக தயாராகி வரும் சூழலில், எதிர்க்கட்சியினர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இதுபோன்ற வில்லைகளைப் பரப்பி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கட்சித் தலைமைக்கும் காவல்துறையிலும் முறையான புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த அடுத்தடுத்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.