மும்பை ஜுஹு பகுதியில் உள்ள புஷ்பா பார்க் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை நடிகர் டைகர் ஷெராஃப் (Tiger Shroff) சென்ற வாகனம் மீது மம்பைக் கும்பல் ஒன்று திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய இந்தத் தாக்குதலில், நடிகர் டைகர் ஷெராஃப் காயமின்றித் தப்பினார். இருப்பினும், அவரது ஓட்டுநர் மற்றும் அருகில் இருந்த மற்றொரு நபர் காயமடைந்து உடனடியாக மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சல்மான் கானுடன் தொடர்பில் இருப்பவர்கள் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துச் சமூக வலைதளத்தில் குரல்பதிவு ஒன்றும் பரவியது. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த அனில் பண்டிட் மற்றும் ஹர்மன் சந்து ஆகியோர் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாகவே எச்சரிக்கை விடுத்தும் அதனைப் பொருட்படுத்தாத காரணத்தினாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருவதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர முதல்வர் காவல்துறையினரை உடனடியாகத் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகப் பதிவான சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் ஆடியோ ஆதாரங்களின் உண்மைத் தன்மையை மும்பை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக் காவல்துறையின் தனிப்படைத் துறையினர் களமிறக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.