மும்பை ஜுஹு பகுதியில் நடிகர் டைகர் ஷெராஃப் பயணித்த வாகனம் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஒரு பதிவு பரவியது. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த அனில் பண்டிட் (Anil Pandit) மற்றும் ஹர்மன் சந்து (Harman Sandhu) ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே எச்சரித்தும் அதனைப் பொருட்படுத்தாத காரணத்தினாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், நடிகர் சல்மான் கானுடன் தொடர்பில் இருப்பவர்கள் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றும் திரைத்துறையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும் அந்தப் பதிவில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிறையில் உள்ள கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் சமூகத்திற்குச் சல்மான் கான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவிக்கும் ஆடியோ பதிவும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனில் பண்டிட் என்பவரின் பெயரில் பரவிவரும் இந்த ஆடியோ பதிவில், நடிகர் சல்மான் கானின் குடும்பத்தினரைக் குறித்தும் கடுமையான மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. எனினும், சமூக வலைதளங்களில் பரவிவரும் இந்தச் செய்திகள் மற்றும் ஆடியோ பதிவுகளின் உண்மைத் தன்மை குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நபர்களின் பின்னணி மற்றும் அவர்களுக்குப் பிற மாநிலக் குற்றக் குழுக்களுடன் உள்ள தொடர்புகள் குறித்தும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களைக் கண்டறியும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.