ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில், உக்ரைனின் 30-வது பிரிகேடைச் சேர்ந்த 49 வயதான கொன்ஸ்டாண்டின் விளாசென்கோ (Kostyantyn Vlasenko) என்ற ராணுவ வீரர் போர்க்களத்தில் 491 நாட்கள் தனியாகச் சிக்கியிருந்தார். குகை மற்றும் வடிகால் குழாய் பகுதியில் மறைந்திருந்த இவர் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அவரது இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. காயங்கள் அழுகத் தொடங்கியதால் வேறு வழியின்றித் தனது கால்களில் ஒன்றை கத்தியால் அவரே துண்டித்துக் கொண்டு உயிருக்குப் போராடியுள்ளார்.
நிலப்பரப்பு முழுவதும் கண்ணிவெடிகள் நிறைந்திருந்ததாலும் ரஷ்ய ட்ரோன்களின் தாக்குதல் தீவிரமாக இருந்ததாலும், அவரை மீட்கத் தரைவழி ரோபோக்களையோ அல்லது சக வீரர்களையோ அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உக்ரைனின் ‘குர்சுஃப் டிஃபென்ஸ்’ (Gurzuf Defence) நிறுவனம் உருவாக்கிய ஹெக்சாகாப்டர் ரகப் பெரிய ட்ரோன் ஒன்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மீட்புப் பணிக்குப் பயன்படுத்தப்பட்டது. கவச இருக்கையுடன் மாற்றியமைக்கப்பட்ட அந்தப் பெரிய ட்ரோனில் விளாசென்கோ தன்னைத் தானே பிணைத்துக் கொள்ள, வான்வழியாகவே அவர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தான் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கை இன்றித் தனிமையில் கழித்த நாட்களை விளாசென்கோ ஊடகங்களிடம் நினைவு கூர்ந்துள்ளார். “என் கால்களைக் கத்தியால் அறுக்கும்போது கண்ணீர் வழிந்தது, ஆனால் வேறு வழி இருக்கவில்லை” என்று கூறிய அவர், தனது சக வீரர்கள் மற்றும் குடும்பத்தினரின் நினைவே தன்னை இத்தனை நாட்கள் உயிரோடு வைத்திருந்ததாகத் தெரிவித்தார். உலகிலேயே ஒரு ராணுவ வீரர் ட்ரோன் மூலம் நேரடியாகப் போர்க்களத்தில் இருந்து மீட்கப்பட்டது இதுவே முதல்முறை என்பதால் இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது உக்ரைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விளாசென்கோவிற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.