Posted in

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவு!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் கடந்த அக்டோபர் 11 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அன்று இரவு குடும்பத்தினருடன் தூங்கச் சென்ற சிறுமி, மறுநாள் அக்டோபர் 12 அதிகாலை வீட்டை விட்டு மாயமானதாகக் கூறப்படுகிறது. இது குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

சிறுமியைக் கண்டுபிடிக்க 8-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும், ஓய்வுபெற்ற தடய அறிவியல் நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு, 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், மோப்ப நாய்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் உதவியுடன் கிணறுகள் மற்றும் மலைப்பாறைகளில் தீவிரமாகத் தேடப்பட்டது. இருப்பினும், 10 நாட்கள் கடந்தும் சிறுமி குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்காததால், உள்ளூர் காவல்துறையின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.

வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையிலும், சிறுமியின் பெற்றோர் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்த நிலையிலும், இந்த வழக்கைச் சிபிசிஐடிக்கு மாற்றித் தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சிறப்பு விசாரணை அதிகாரிகள் குழுவினர் விரைவில் செஞ்சி பகுதிக்கு நேரில் சென்று விசாரணையை முடுக்கிவிட உள்ளனர்.