Posted in

காலிந்கிராட் பகுதியில் ரஷ்ய போர் விமானம் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய விமானிகள்!

ரஷ்யாவின் காலிந்கிராட் (Kaliningrad) மாகாணத்தில் உள்ள செர்ன்யாகோவ்ஸ்க் பகுதியில், ரஷ்ய விமானப்படைக்குச் சொந்தமான Su-30SM ரகப் போர் விமானம் அக்டோபர் 21 அன்று வழக்கமான பயிற்சிப் பறத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், அப்பகுதியில் உள்ள ஒரு மயானத்திற்கு அருகில் உள்ள காலி நிலப்பரப்பில் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் அப்பகுதியில் அடர்ந்த கரும்புகை மண்டலம் எழுந்தது. இந்த விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் ஆயுதங்கள் எதுவும் பொருத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் கீழே விழுவதற்குச் சில விநாடிகளுக்கு முன்பு அதிலிருந்த இரு விமானிகளும் இருக்கையுடன் வெளியேறி (Eject) உயிர் தப்பினர். எனினும், விபத்தில் காயமடைந்த இரண்டு விமானிகளும் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. விமானம் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விழுந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினரும் தொழில்நுட்பக் குழுவினரும் விமானத்தின் பாகங்களை மீட்டுத் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் இந்த விபத்து நடந்ததை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான கூடுதல் விவரங்கள் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.