Posted in

பிரான்சில் ஷாமோண்டா வைரஸ் தாக்கி முதன்முறையாக மனிதர் உயிரிழப்பு: பொதுமக்களுக்கு அச்சுமில்லை எனத் தகவல்!

பிரான்ஸில் கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு ஷாமோண்டா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர் கடந்த அக்டோபர் தொடக்கத்தில் உயிரிழந்துள்ளார். இதுவரை கால்நடைகளை மட்டுமே தாக்கி வந்த இந்த வைரஸ், மனிதர்களைப் பாதித்துள்ள முதல் நிகழ்வு இதுவாகும் எனப் பிரான்ஸ் நாட்டுச் சுகாதார மற்றும் விவசாய அமைச்சகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. எனினும், பாதிக்கப்பட்ட நபர் ஏற்கனவே உடல் உறுப்புகள் பலவீனமடைந்த தீவிர நோயால் சிகிச்சைப் பெற்று வந்தவர் என்பதால் இது ஒரு விதிவிலக்கான வழக்கு என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளில் கால்நடைகளிடையே பரவி வந்த இந்த ஷாமோண்டா வைரஸ், சிறிய பூச்சிகள் மற்றும் ஈக்கள் மூலமாகப் பரவுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த கோடை காலத்தில் பிரான்சின் கிழக்குப் பகுதிகளில் கால்நடைகளிடையே பரவியிருந்த இந்த வைரஸ், அங்குள்ள பூச்சிகள் மூலமாகவே அந்த நோயாளியைத் தாக்கியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொற்று நோயால் பொதுமக்களுக்குப் பெரிய அளவில் எந்தவிதமான பொது சுகாதார அச்சுறுத்தலும் இதுவரை கண்டறியப்படவில்லை எனச் சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐரோப்பிய நோய் தடுப்பு மையத்துடன் இணைந்து பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொற்று மனிதர்களுக்குப் பரவும் விதம் மற்றும் அதன் தாக்கம் குறித்துத் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கால்நடைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியுள்ள இந்த வைரஸ் குறித்த கூடுதல் மருத்துவ ஆய்வுகள் மற்றும் பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.