ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்க சிறப்புத் தூதுவர் ஸ்டீப் விட்காஃப் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, உக்ரைன் மற்றும் அமெரிக்காவுடன் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்த மாஸ்கோ தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறுகிய கால இடைவெளி கொண்ட தற்காலிக போர்நிறுத்தங்களை ஏற்க முடியாது என்றும், நீண்ட கால அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பாதுகாப்புச் சிக்கல்களுக்குத் தற்காலிக இடைநிறுத்தங்கள் தீர்வு தராது என்றும், ஒட்டுமொத்தமான இறுதி ஒப்பந்தமே முக்கியம் என்றும் ரஷ்யத் தரப்பு வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, அமெரிக்கத் தூதுவர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய சில மணி நேரங்களிலேயே உக்ரைன் மீது கடுமையான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் பொதுமக்களும் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி சர்வதேச அரங்கில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
தொடரும் வான்வழித் தாக்குதல்களுக்கு இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்து ரஷ்யா தெரிவித்திருக்கும் இந்தக் கருத்துகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கும் அதேவேளையில் தாக்குதல்கள் தொடர்வது அமைதி முயற்சியில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உக்ரைன் தரப்பு விமர்சித்துள்ளது.
அவசியமான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் எதிர்கால ஒப்பந்தங்கள் குறித்த அடுத்த கட்ட ஆலோசனைகள் வரும் நாட்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா, உக்ரைன், விளாடிமிர் புடின், அமெரிக்கா, சமாதானப் பேச்சுவார்த்தை, Russia, Ukraine, Vladimir Putin, US, peace talks