தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்குக் குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று கேக் வழங்குவதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 7.54 கோடி ரூபாய் மதிப்பில் 62.46 லட்சம் கேக் துண்டுகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் பணிகள் (AOC) எலைட் நேச்சுரல், ட்ரீம் பேக், பிரிட்டானியா மற்றும் ஐடிசி ஆகிய நான்கு முன்னணி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் உண்ணும் வகையில் மிக்ஸ்டு ஃபுரூட், கிளாசிக் வெண்ணிலா மற்றும் ரிச் சாக்லேட் ஆகிய மூன்று சுவைகளில் இந்த கேக் வகைகள் தயாரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்படவுள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் தரம் வாய்ந்தவையாகவும், குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு கெட்டுப்போகாத பாதுகாப்பு முறைமையைப் பின்பற்றியும் தயாரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு உரிய ஆய்வகச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்த பின்னரே நிறுவனங்கள் இந்தத் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளன. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தரமான கேக்குகளைச் விநியோகிக்க வேண்டும் என அரசுத் தரப்பில் கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள நிறுவனங்கள் தற்போது தீவிரமான தயாரிப்பு மற்றும் பேக்கிங் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தைகள் தினத்தன்று மாணவர்களுக்குத் தடையின்றி இந்த இனிப்பு வகைகளை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட வாரியாகத் துறையின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.