தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தனது நீலாங்கரை இல்லத்தில் வசித்து அங்கிருந்து தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கிறார். தினசரி அவர் வந்து செல்லும் வழிகளில் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் போக்குவரத்து தற்காலிகமாகத் தடை செய்யப்படுவதால், பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்து வந்தன. இந்தச் சூழலில், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் தலைமைச் செயலகத்திற்கு மிக அருகிலுள்ள வி.ஐ.பி. பாதுகாப்பு வளையத்திற்குள்ளான பகுதிக்கு மாற அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காகச் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் அமைந்துள்ள ‘பொதிகை இல்லம்’ அரசு இல்லம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் தலைமைச் செயலாளரான வெ. இறையன்பு வசித்த இந்த இல்லத்தில் தற்போது வர்ணம் பூசுதல் மற்றும் உள் அலங்காரப் புனரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமைச் செயலகத்திற்கு மிக அருகில் இந்த இல்லம் அமைந்திருப்பதால், தினசரி பயண நேரமும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்துத் தடைகளும் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புனரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, முதலமைச்சர் விஜய் நேரில் சென்று இல்லத்தைப் பார்வையிட்டு இறுதி முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது.
இந்த இல்ல மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் தேதிகள் விரைவில் வெளியாகும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.