முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுச் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலரும், வேலூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சரவணன் செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். இந்த அச்சுறுத்தல் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் காவலத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.
விசாரணையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் சரவணன் என்பது உறுதிசெய்யப்பட்டது. இவர் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியது மற்றும் மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குத் தவெக நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், அரசியல் நாகரிகத்தை மீறிப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதேவேளையில், சட்ட ஒழுங்கைப் பேணிப் காக்க அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று காவல் துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள திமுக கவுன்சிலர் சரவணனைத் தீவிரமாகத் தேடி வரும் 3 தனிப்படை போலீசார், விரைவில் அவரைக் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சம்பவம் புழல் சிறைப் பகுதி மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.