பிரிட்டனின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் கடந்த ஆண்டு லண்டன் நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலில் ஆண்டனி வில்லியம்ஸ் என்ற நபர் கத்தியால் சக பயணிகளை சரமாரியாகத் தாக்கினார். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ரயில்வே பணியாளர்கள் காயமடைந்த நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணை கேம்பிரிட்ஜ் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது, தாக்குதல் நடத்திய நபரை ரயில் உணவக ஊழியர் ஒருவர் சமையல் கடாயைப் பயன்படுத்தித் தடுக்க முயன்ற அதிர்ச்சி தரும் கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் நீதிமன்றத்தில் திரையிடப்பட்டன.
தாக்குதலின் போது “நீ சாக விரும்புகிறாயா?” எனப் பயணிகளை மிரட்டியபடி அந்த நபர் கத்தியை வீசியதாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ரயிலின் உணவு விநியோகப் பிரிவில் பணியாற்றிய சமீர் சிடௌனி என்ற ஊழியர், குற்றவாளியைக் தடுக்கத் தற்காப்பாகச் சமையல் கடாயை ஏந்திப் போராடியுள்ளார். மேலும் பல பயணிகள் தைரியமாக அந்த நபரின் கத்தியைப் பிடுங்க முயன்று தற்காப்புத் தாக்குதலில் ஈடுபட்டதும் நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பயணிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய குற்றவாளி ஆண்டனி வில்லியம்ஸ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆபத்தான சூழலில் துணிச்சலுடன் செயல்பட்டுத் தாக்குதலைத் தடுக்க முயன்ற பயணிகள் மற்றும் ரயில் ஊழியரின் செயலை நீதிமன்றம் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இந்த கொடூரக் கத்திக்குத்து வழக்கு தொடர்பான விரிவான நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அடுத்த சில வாரங்களுக்கு அரசு தரப்பு மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் தொடரும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.