தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபான பாட்டில்கள் உடைந்து சேதமடைவதைத் தடுக்கவும், பண முறைகேடுகளைக் கட்டுப்படுத்தவும் 4 புதிய விதிகளை டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த உத்தரவின்படி, லாரிகளில் இருந்து மதுப் பெட்டிகளை ஏற்றி இறக்கும் போது வெளிப்புறத்தில் பாட்டில்கள் உடைந்திருந்தால் அதற்கு இனி கடை ஊழியர்களே முழு பொறுப்பேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரையில் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறை விரைவில் தமிழகத்தின் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விரிவாக்கப்படவுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, சரக்குப் பெட்டிகளை லாரிகளில் இருந்து இறக்குவதற்காகக் கடை ஊழியர்களுக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் அல்லது ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே எந்தவித நேரடி பணப் பரிவர்த்தனையும் இருக்கக்கூடாது. போக்குவரத்து மற்றும் சரக்கு இறக்குவதற்கான கட்டணத்தை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகமே நேரடியாக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கும். மேலும், கடைகளுக்கு வரும் மதுப் பெட்டிகளைப் போக்குவரத்து ஒப்பந்ததாரரின் தலைமையிலேயே பாதுகாப்பாக இறக்கி அடுக்க வேண்டும் என்றும், ஊழியர்கள் ஒவ்வொரு பெட்டியையும் ஸ்கேன் செய்து பாட்டில்களை எண்ணிப் பார்த்தே பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் மூலம் கள்ளத்தனமாக கூடுதல் பணம் வசூலிப்பது மற்றும் ஊழியர்களிடையே ஏற்படும் தேவையற்ற தகராறுகள் தவிர்க்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாட்டில்கள் உடைந்ததற்குக் போலி காரணங்களைக் கூறி கணக்கு காட்டுவதைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இத்திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் இந்த 4 புதிய விதிகளும் விரைவில் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன.
முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் விதிமீறலில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.