Posted in

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு 2 நாள் போலீஸ் காவல்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் சுமார் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் மற்றும் முறைகேடு நடைபெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுச் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எல். சத்தியமூர்த்தி முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

காவல்துறையின் மனுவைப் பகுதியளவு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை இன்று மதியம் 1 மணி முதல் வரும் நவம்பர் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். விசாரணையின் போது அவரை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ எவ்விதத் துன்புறுத்தலுக்கும் உட்படுத்தக் கூடாது என நீதிமன்றம் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடைபெறும் முழு நேரமும் வழக்கறிஞர் பி.கே. பாபு அருகில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணை விவரங்கள் கேட்காத தொலைவில் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

காவல் முடிந்து நவம்பர் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாகவும், விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாகவும் அவருக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் நவம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சரிடம் தீவிர விசாரணையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த முறைகேடு புகாரில் தொடர்புடைய மற்ற நபர்கள் மற்றும் பணப் பரிமாற்றம் குறித்த விவரங்களைக் கண்டறியக் காவல் துறை தீவிரக் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.