தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகப் புதுக்கோட்டை மாவட்டத்திற்குச் செல்லும் விஜய், ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்குகிறார். இதற்காகச் சென்னையில் இருந்து ‘எம்பிரேயர் லெகசி 600’ (Embraer Legacy 600) என்ற சொகுசுத் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாகப் புதுக்கோட்டைக்குக் பயணம் மேற்கொண்டார். புதுக்கோட்டையில் ரூ.23.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன புதிய பேருந்து நிலையம் மற்றும் பிரமாண்ட உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை அவர் திறந்து வைக்கிறார்.
விஜய் பயன்படுத்திய இந்த 13 பயணிகள் பயணிக்கும் திறன் கொண்ட ‘எம்பிரேயர் லெகசி 600’ தனி விமானத்திற்கு ஒரு மணி நேர வாடகையாகச் சுமார் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விராலிமலை தொகுதி வழியாக 4 கிலோமீட்டர் தூரத்திற்கு முதலமைச்சர் விஜய் ரோட்ஷோ நடத்தவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் சுமார் 4,000 காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது புதுக்கோட்டை சத்தியமூர்த்தி சாலையில் சீரமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் திறப்பு விழா பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அரசு விழா நிறைவடைந்ததும், பல்வேறு துறை சார்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் விஜய் சிறப்புரையாற்றவுள்ளார்.