Posted in

உக்ரைன் மற்றும் ரஷியாவில் அவசர எச்ச செயலி ஹேக்: அணுஆயுதத் தாக்குதல் போலி அறிவிப்பால் பரபரப்பு!

உக்ரைனின் அதிகாரப்பூர்வ ‘ஏர் அலர்ட்’ (Air Alert) மற்றும் ரஷிய அவசரக்கால அமைச்சகத்தின் மொபைல் செயலிகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் இச்செயலிகளை ஊடுருவி, அணுஆயுத ஏவுகணைத் தாக்குதல், கதிர்வீச்சு அபாயம் மற்றும் வேதியியல் தாக்குதல்கள் குறித்துப் போலி எச்சரிக்கைச் செய்திகளைப் பயனாளர்களுக்கு அனுப்பியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை காலை வரை (நவம்பர் 1-2) நடந்த இந்தச் ஊடுருவல் சம்பவம் இருநாட்டு மக்கள் மத்தியிலும் தற்காலிக குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

உக்ரைனின் ஏர் அலர்ட் செயலியில், ‘கீவ் நகரில் கதிர்வீச்சு மற்றும் வேதியியல் தாக்குதல் அபாயம் உள்ளது’ என்றும், ‘ஒரேஷ்னிக் ஏவுகணைகள் மூலம் அணுஆயுதத் தாக்குதல் நடத்தப்பட உள்ளது’ என்றும் போலி செய்திகள் பரப்பப்பட்டன. அதேபோல ரஷிய அவசரக்கால செயலியில், ‘அனைத்துப் பகுதிகளிலும் பி1-சன் அமைப்புகள் மூலம் அணுஆயுதங்கள் ஏவப்பட்டுள்ளதால் 3 வாரங்களுக்கு உணவைச் சேமித்து நிலத்தடி அறைகளில் தஞ்சமடையுங்கள்’ எனப் போலி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இத்தகவல்கள் முற்றிலும் தவறானவை என இருநாட்டு அதிகாரிகளும் உடனடியாகத் தெளிவுபடுத்தினர்.

இந்த ஹேக்கிங் சம்பவம் குறித்து உக்ரைனிய வான்படை வெளியிட்ட அறிக்கையில், “செயலியில் பகைமை அமைப்புகளின் ஊடுருவல் ஏற்பட்டுள்ளது, கதிர்வீச்சு ஆபத்து எதுவும் இல்லை, பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டது. அதேபோல ரஷிய அவசரக்கால அமைச்சகம், நாட்டின் பொது எச்சரிக்கை கட்டமைப்பு பாதுகாப்பாக உள்ளதாகவும், போலி தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இருதரப்பும் கூறியுள்ளன.

தற்போது இருநாடுகளின் இணையப் பாதுகாப்பு நிபுணர்களும் பாதிக்கப்பட்ட செயலிகளின் செயல்பாடுகளைச் சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சைபர் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்கப் பாதுகாப்பு நெறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.